கப்பல் பயணம்  

Posted by Prabhu.S

courtesy: Dinamalar.com

"உலகம் சுற்றும் தமிழன்' என்ற பழைய நூல் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்புத்தகத்தை எழுதியவர், ஏ.கே.செட்டியார் என்பவர். இவர், "குமரி மலர்' என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவராம்! காந்தியின் சீடராக இருந்த இந்தத் தமிழர் தான் அந்த காலகட்டத்தில் உலக நாடுகள் பலவும் சுற்றி வந்த முதல் தமிழர் என்கின்றனர்.
நூலில் அவர் கூறுகிறார்...
பயணம் செய்வதற்கு புதிய, புதிய சாதனங்களை எல்லாம் கண்டுபிடித்து வருகின்றனர். வேகத்தை மட்டும் முக்கியமாகக் கருதினால், ஆகாய விமானமும், ரயிலுமே சிறந்தவை. ஆனால், சவுகரியத்தை முக்கியமாகக்
கருதினால், கப்பல் பயணத்துக்கு இணையானது வேறெதுவுமில்லை.
ரயிலைப் போல் வேகமாகச் செல்லாது கப்பல்; மணிக்கு, பத்து மைல் முதல், 30 மைல் வரை தான் செல்லும். கப்பலைப் பொறுத்தவரை அதன் வேகத்தை விட, அதன் அளவும், எடையும் முக்கியமானவை. கப்பல் எவ்வளவுக்கெவ்வளவு சிறிதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நம் பயணமும் கஷ்டமாக இருக்கும். கப்பல் பெரிதாக இருந்தால், அதிகமாக ஆடாமல், அசையாமல் சந்தோஷமாகப் பயணம் செய்யலாம்.
நம் நாட்டில், ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் விடுமுறை கிடைத்தால், அதுவும் சம்பளத்தோடு விடுமுறை கிடைத்தால், சிலர் வெளியூர் சென்று சுகமாகக் காலம் கழிக்கின்றனர் அல்லவா? மேலை நாடுகளிலே சிலர் இவ்வாறு விடுமுறை கிடைத்தால், கப்பல் பயணத்திலேயே அதன் பெரும் பகுதியையும் செலவிடுகின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்களுடன் பல நாள் கப்பலில் பயணம் செய்வதால், பலருடன் பழகும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. தூய கடற்காற்று... தூசி என்பதையே பார்க்க முடியாது. நினைத்த பொழுதெல்லாம் கடல் நீரில் குளிக்கலாம். நீந்தத் தடாகம் வேறு. கப்பலுக்குள்ளேயே மைல் கணக்காக நடக்கலாம்.
சீட்டாட்டம் முதல் டென்னிஸ் வரை ஆடலாம். பொழுது போவதற்கு வானொலி, திரைப்படம் முதலியவை உண்டு. அவற்றில் விருப்பம் இல்லாதவர்களுக்குப் புத்தக சாலையும் உண்டு. சில கப்பல்களுக்கு ஆறு மாடிகள் உண்டு. மாடிகளுக்குச் செல்ல மின்சார, "லிப்டு'களும் உள்ளன.
கப்பலில் முக்கியமானது சாப்பாடு. சாப்பாட்டு விவரங்களை அச்சடித்துக் கொடுப்பர். எந்த நாட்டு உணவும் தயார் செய்து கொடுப்பர். உதாரணமாக, ஒருநாள் சாப்பாட்டைக் கவனியுங்கள்... காலை படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போதே தேநீர் அல்லது காபி, ரொட்டி, பழம் முதலியன. 8:10 மணியிலிருந்து 9:30 மணிக்குள் காலை ஆகாரம். 11:00 மணிக்கு, "சூப்'பும், ரொட்டியும். பகல், 1:00 மணிக்கு சாப்பாடு. மாலை, 4:00 மணிக்கு "டீ'யும், "கேக்'கும். இரவு, 7:00 மணிக்கு இராச் சாப்பாடு. இரவு, 10:00 மணிக்கு, "சாண்ட் விச்'சும், காபியும். மூன்று உணவு வேளைகளுக்கும் நடுவில் வாத்திய கோஷ்டியினர் வாத்தியம் வாசிப்பர். "குடி' வகைகள் நிறைய வைத்திருப்பர்.
குறிப்பிட்ட துறைமுகத்தை கப்பல் அடைவதற்கு முதல் நாள் இரவு பிரிவுபசார விருந்து நடைபெறும். அதில், ஒவ்வொரு பயணியின் மேஜையிலும், வர்ணக் காகிதத்தால் செய்யப் பெற்ற குல்லா ஒன்றிருக்கும். அந்தக் குல்லாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வினோதமாயிருக்கும். அத்தனைப் பயணிகளும் தங்கள் மேஜையிலுள்ள வர்ணக் குல்லாவை அணிந்து ஆர்பாட்டம் செய்வர். ஒரே கோமாளிக் கூத்து தான். சில பயணிகள் உணவுப் பொருளைக் கையிலெடுத்து ஆடிக் கொண்டே சாப்பிடுவர்.
நள்ளிரவிலே சந்திரன் ஒளியிலே கப்பலின் மேல் தட்டில் தனிமையாக நின்று, கடற்காற்றை அனுபவிப்பதே ஓர் ஆனந்தம். பகல் நேரத்தை விட, இரவு நேரத்தில் தான் அதிக வேகமாக கப்பல் செல்லும். காற்றும், மழையும் கலந்து வருமானால், அது ஒன்று தான் கப்பல் பயணத்தைக் கெடுக்கும். மற்றபடி கப்பல் பயணம் போல் சுகமானது வேறில்லை!
— கப்பலில் பயணம் செல்ல எனக்கு ஆசை வந்து விட்டது; உங்களுக்கு?

This entry was posted on Tuesday, August 30, 2011 and is filed under , , , .