மதம் / மாமிசம் / மனிதன்  

Posted by Prabhu.S

தினமலர்.com இல் இருந்து,

இயற்கைக்கு எதிராக மனிதன் செயல்படும் போது, அது, அவனுக்கு, "பொட்' என்று தலையில் குட்டியது போன்ற பாடம் கற்பிக்கிறது - ஒவ்வொரு முறையும்... ஆனாலும், இவன் திருந்துவதில்லை!
இப்படித்தான் நடந்தது இங்கிலாந்தில்... இங்கிலாந்து நாட்டு பசுமாடுகளை, "டிவி'களில் பார்த்து இருப்பீர்கள்... கொழு, கொழுவென இருக்கும்; 30-40 லிட்டர் பால் கொடுக்கும். இதற்கும் அதிகமாக பால் வேண்டும் என பேராசைப்பட்டனர்.
இதற்கென ஆராய்ந்து, விசேஷ உணவு தயாரித்தனர். சாக பட்சிணியான மாட்டுக்கு, மாட்டு எலும்புத் தூள் கலந்த உணவைக் கொடுத்தனர்... பால் மற்றும் இறைச்சி அதிகமாகத்தான் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் மாடுகளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இதை, "மேட் கவ் டிசீஸ்' என்றனர்.
இந்த நோய் பீடித்த மாடுகளை, சில ஆண்டுகளுக்கு முன் லட்சக்கணக்கில் கொன்று எரித்தனர்.
இங்கிலாந்தையும், பிரான்ஸ் நாட்டையும் ஆட்டிப் படைப்பது, "கா-வா' நோய் எனப்படும், "புட் அண்ட் மவுத்' நோய். நம் நாட்டில், இந்த நோய் கண்ட மாடுகளை தனியே பிரித்து, விளக்கெண்ணெயும், மஞ்சளும் தடவி வருவர்... இந்த நோய் கண்ட மாடுகள், உணவு எடுத்துக் கொள்ளாது... அதனால், மூங்கிலை வாயில் நுழைத்து, அரிசிக் கஞ்சி ஊற்றுவர். பத்து நாளில் நோய் ஓடிப் போகும்.
ஆனால், இங்கிலாந்திலோ, இந்நோய் கண்ட, மாடு - ஆடுகள், ஒன்றல்ல, இரண்டல்ல... ஏழு லட்சத்தை கொன்று குவித்துள்ளனர்.
நினைத்தே பார்க்க முடியவில்லை... இதென்ன சோகம்...
இந்த நேரத்தில், கோவை பாரதியார் பல்கலைக் கழக, உளவியல் துறை பேராசிரியர் வேதகிரி கணேசன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது... அவர் கூறுகிறார்...
மதங்கள் சொல்வதெல்லாம், மனித நேயத்துடன் மனிதர்கள் செயல்பட வேண்டும் என்பதே. ஆனால், தங்கள் சுயநலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதையே மனிதர்கள் விரும்புகின்றனர்; அவர்களுக்கு, தங்களது சுயநலத்திற்கு எதிரானதாக மனிதநேயம் தோன்றுகிறது.
பெரும்பான்மையினர், பெயருக்கு தங்கள் தாய், தந்தையரின் மதத்தைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றனர்; இன்னும் சிலர், மதமாற்றம் செய்கின்றனர்.
ஆனால், அநேகமாக எல்லாருமே மதங்கள் கூறுவதைப் பின்பற்றுவதில்லை...
உதாரணமாக, உணவுப் பழக்கத்தை எடுத்துக் கொள்ளலாம்... இந்தியா முழுவதும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் சைவ உணவையே சாப்பிட்டதாக யுவான் சுவாங் என்ற சீன அறிஞர், இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தபோது, பார்த்து எழுதியுள்ளார்.
சமூகத்தால் ஒதுக்கப்பட்ட குற்றவாளிகள் ஊரை விட்டுத் துரத்தப்பட்டு காடுகளில் வாழ்ந்தனர். "சண்டாளர்கள்' என்று கூறப்பட்ட இந்த மதத்தைச் சேர்ந்த இவர்கள் மட்டுமே வேறு வழியின்றி காடுகளில் வாழும் போது புலால் உணவை உண்டு வந்தனர்.
ஆனால், தற்போது இந்து மதத்தினரில் பெரும்பாலோர் மாமிச உணவு சாப்பிடும் பழக்கத்தில் சிக்கி விட்டனர்; அதை, கவுரவமானதாகவும் கருதுகின்றனர்.
"புலால் மறுத்தல்' என்ற ஒரு அதிகாரத்தில், 10 குறள்கள் மூலம் மாமிச உணவை மறுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார் திருவள்ளுவர்.
அவர், மாமிச உணவை உண்பவர் உள்ளவரையில், அதை விற்பவர்கள் இருப்பர் என்று கூறியுள்ளார்.
விற்பவர்கள் உள்ளவரை, வளர்ப்பவர்கள் இருப்பர்; வளர்ப்பவர் உள்ளவரை, மேய்ப்பவர்கள் இருப்பர்; மேய்ப்பவர் உள்ளவரை பூமியின் மேற்பரப்பிலுள்ள பச்சை பசேலென்ற பாதுகாப்புக் கவசம் தேய்வடையும்.
அதனால், சூரிய கதிர்வீச்சுப் பட்டு நிலபரப்பு பாலைவனமாகும். நிலத்தடி நீர் கீழே இறங்கி, நீர்வளம் வற்றிப் போகும்.
ஒரு கிலோ மாமிசம் ஒருவர் உண்ணும் போது, அது, பல கிலோ பசுமையான தாவர இலைகளால் ஆனது என்பதை உணர்வதில்லை; பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு, தான் காரணமாவதை உணர்வதில்லை.
"உயிர்களைக் கொன்று மாமிச உணவைச் சாப்பிடக் கூடாது...' என்று கூறினார் புத்தர். ஆனால், இன்று மாமிச உணவைச் சாப்பிடுகின்றனர் புத்த பிட்சுகள். ஏனென்று கேட்டால், "நாங்கள் மாமிசத்திற்காக உயிர் வதை செய்வதில்லை; மாமிசத்தைக் கடையில் வாங்குகிறோம்...' என்கின்றனர்.
அசைவ உணவை இயேசுநாதர் உண்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.
சைவ உணவையே உண்டு வந்தார் முகமது நபி. குர்-ஆனில், "அல்பகறர் (பசு)' என்ற முதல் அத்தியாயத்தில், "அல்லாஹ் (இறைவன்) மரங்களைப் படைத்தேன். ஏனென்றால், அவை உங்களுக்கு (மக்களுக்கு) நல்ல (ஹலால்) உணவாகும் என்பதற்காக...' என்று கூறியதாக குறிப்பிடுகிறார் நபிகள் நாயகம்.
மேலும், இறைவன், "பசுக்களை (பால் கொடுக்கும் மிருகங்களை - ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை) படைத்தேன். அவற்றில் ரத்தத்திற்கும், சாணத்திற்கும் இடையில் பாலைப் படைத்தேன். ஏனென்றால், அது உங்களுக்கு நல்ல (ஹலால்) உணவாகும் என்பதற்காக...' என்று குறிப்பிடுகிறார்.
"உணவாகும்' (மாமிசம்) என்பதற்காக என்று குறிப்பிடவில்லை.
சொர்க்கத்தில் பாலும், பழங்களும், தேனும் கிடைக்கும் என்று கூறுகிறார் இறைவன். இதன் மூலம், அவற்றின் சிறப்பை அறியலாம். தடை செய்யப்பட்ட உணவு என்று ரத்தத்தை கூறுகிறார் இறைவன்.
மாமிசத்திலிருந்து ரத்தத்தை முழுமையாக நீக்க முடியுமா?
ஜைன மதத்தினரும், உயிர் வதையையும், மாமிச உணவையும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். புத்த மதத்தைப் பின்பற்றும் சீனர்களும், ஜப்பானியர்களும் சைவ உணவை பின்பற்ற இயலாமல், மதக் கொள்கைகளுக்கு முரணான உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
சைவ உணவுப் பழக்கத்தை பின்பற்றாத வரையில், மக்களிடம் பிற உயிரினங்களிடமும் அகிம்சை முறையைப் பின்பற்றாத வரையில், இந்துக்களோ, பவுத்த மதத்தினரோ, கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியரோ, யூதர்களோ, ஜைன மதத்தினரோ தங்கள் மதக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக ஏற்றுக் கொள்ள முடியாது.
பெரும்பாலும், மாமிச உணவை உண்டு வந்த, இந்த உலகையே ஒரு காலத்தில் ஆண்டு வந்த மேலை நாட்டினர், நூற்றுக்கு, 40 பேர் சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறி விட்டனர்.
இதற்கு மதம் காரணமல்ல; மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் மூலம், மாமிச உணவு இதய நோயை உருவாக்கும் என்ற காரணத்தால்தான்.
இதிலிருந்து, சிந்தனைப் பூர்வமாக செயல்படும்போது, தங்கள் செயல்களை மனிதர்கள் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாகிறது.
எந்த மதமும் சிந்திக்காமல் செயல்படச் சொல்லவில்லை.
மதங்களைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள், அறிவுபூர்வமாகச் சிந்திக்க மறுக்கின்றனர். ஏனென்றால், தங்களது சொந்த ஆசாபாசங்களுக்கு முதலிடம் கொடுக்கும் போது, மதக் கோட்பாடுகளும், கருத்துகளும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
— இப்படி எழுதியுள்ளார்.
எந்த மதமுமே, ஒரு உயிரைக் கொன்று தின்னச் சொல்லவில்லை. விஞ்ஞானப் பூர்வமாகவும் அசைவம் நல்லதல்ல என தெரிய வந்துள்ளது.
உணவுக்காக கால்நடைகளை வளர்ப்பதும், அதற்கு வியாதிகளை வரவழைத்து, பின்னர் லட்சக்கணக்கில் கொல்வதும், என்று முடிவுக்கு வருமோ?
***

This entry was posted on Tuesday, October 11, 2011 .